» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி: பாஜக அரசின் அலட்சியம் : காங். குற்றச்சாட்டு

சனி 12, ஆகஸ்ட் 2017 4:43:56 PM (IST)

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக அரசின் அலட்சியம் காரணம் என காங். குற்றம்சாட்டியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியானது தெரியவந்துள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்கு  தனியார் ஒப்பந்ததாரர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதன் காரணத்தாலேயே குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில், "கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியாகினர். ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இவர்களில் 12 பேர் மூளைக் காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக இறந்தனர். எஞ்சியவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள இரண்டு அமைச்சர்களைப் பணித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாஜக அரசின் அலட்சியம் : குலாம் நபி ஆசாத் 

இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால், கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

Johnson's Engineers

Universal Tiles Bazar




selvam aqua


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory