» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா ஆலோசனைக் கூட்டம்: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உறுதி

வெள்ளி 13, அக்டோபர் 2017 11:32:29 AM (IST)திருச்செந்தூரில் கந்த சஷ்டி முன்னேற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா இம்மாதம் 20ஆம் தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன், திருநெல்வேலி மண்டல ஆணையர் அ.தி.பரஞ்சோதி, திருக்கோயில் இணை ஆணையர் பா.பாரதி, தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மா.கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து,  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:  இக்கோயிலில் கந்த சஷ்டி ஏற்பாடுகள்குறித்து கடந்த 5ஆம் தேதி அறநிலையத் துறை ஆணையர் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து ஏற்பாடுகளையும் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் பக்தர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மொத்தம் உள்ள 35 ஆயிரம் கோயில்களில் 6 ஆயிரத்து 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தற்போது இந்த ஆட்சியில் தொடர்ந்து கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள கிராமபுற கோயில்களுக்கு கடந்த 2001ஆம் ஆண்டுமுதல் ஒரு கால பூஜைக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதனை இந்த அரசு ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியது: நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழாவுக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்குத் தேவையான குளியலறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்படும். பக்தர்களுக்கு கிரிபிரகாரத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை ஒரே இடத்தில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். திருச்செந்தூர் அருகே உள்ள ஊர்களிலும் பேருந்துகள் நின்று செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என மொத்தம் 260 பொதுக் கழிப்பறைகளும், மொத்தம் 42 குளியலறைகளும் ஏற்படுத்தப்படும். கோயில் பேருந்து நிலையம், சமையல் கூடம், திருப்பணி மண்டபம் வடபுறம், வெள்ளைக்கல் மண்டபம் தென்புறம் தாற்காலிக நிழற்குடைகள் அமைப்பது, 24 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது, யாகசாலை நிகழ்ச்சிகளை டி.வி.க்கள் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்வது, சூரசம்ஹார விழாவை 2 இடங்களில் எல்இடி திரை மூலம் நேரடியாக ஒளிப்பரப்புவது, திருகல்யாண நிகழ்ச்சியை டி.வி. மூலம் ஒளிப்பரப்புவது, விழா நாள்களில் தினமு 5 லட்சம் லிட்டர் குடிநீர் தட்டுபாடின்றி வழங்குவது எனவும், ஆம்புலென்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு வாக்கி டாக்கியுடன் கூடிய காவலரை நியமிப்பது, அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் குறைந்தபட்சம் 300 பேருந்துகளை இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Johnson's Engineers

selvam aquaUniversal Tiles BazarNew Shape TailorsThoothukudi Business Directory