» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் : மாநகராட்சி ஆணையர் வேண்டுகாேள்

செவ்வாய் 14, நவம்பர் 2017 7:26:55 PM (IST)

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி சார்பாக எடுக்கப்படும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.

குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் பசுமை வளாகம் திட்டத்தின்கீழ் மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குட்டி கமாண்டோ படையினரைக் கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனிஅலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றியதோடு, மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பின்மீது உள்ள விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடலோடு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். 

இதன் தொடர்ச்சியாக இப்பள்ளியின் குட்டி கமாண்டோ படை மாணவர்களோடு பள்ளி வளாகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுப்புழுக்களின் உற்பத்தி நிலைகள் மற்றும் காரணிகளை எவ்வாறு அடையாளம் காண்பது, தடுப்பது என்பது குறித்து களப்பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகள் தின உறுதி மொழி மற்றும் டெங்கு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர்நல அலுவலர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தினி கௌசல் செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய ஆணையர் மாணவப்பருவத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சமுதாயத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பதில் முன்னேற்றம் காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்பொழுது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் சரியாக பொருத்தமான மூடிகள் கொண்டு மூடப்பாடாததோடு, காற்றுக்குழாய்கள் கொசுவலை கட்டாமல் இருப்பது தெரிய வருவதாகவும் இதனை பொது மக்கள் மிகுந்த கவனம் கொண்டு மேற்படி தவறுகளை அலட்சியப்படுத்தாமல் சரி செய்ய வேண்டும் எனவும் தவறும்பட்சத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி சார்பாக எடுக்கப்படும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து, தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகாதவண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களை பொறுத்தவரையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது வளாகம் ஏடீஸ் கொசுப்புழுக்கள் அற்ற வளாகம் என அறிவிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு 17.11.2017க்குள் அறிவித்து சுயஉறுதிமொழி சான்று மாவட்ட கல்வி அலுவலர் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியரால் இன்று (14.11.2017) தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுயஉறுதி மொழி படிவம் மாவட்ட இணையதளம் மற்றும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இது தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு சம்மந்தப்பட்ட மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவு அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொ ண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar

Johnson's Engineers




New Shape Tailors





selvam aqua



Thoothukudi Business Directory