» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆற்றுமணல் கடத்திய 5 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

சனி 13, ஜனவரி 2018 8:52:00 AM (IST)

எட்டயபுரம் அருகே ஆற்றுமணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீஸார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட கீழ்நாட்டுக்குறிச்சி, முத்தலாபுரம், நம்பிபுரம், பேரிலோவன்பட்டி கிராம வைப்பாற்றின் கரையோரங்களில் ஆற்றுமணல் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்பி மகேந்திரன் தலைமையில், விளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம், காவல் ஆய்வாளர் ராமையா, உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் பிரபு பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார், வைப்பாற்று படுகையோர கிராமங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பேரிலோவன்பட்டி கிராம வைப்பாற்றின் கரையோரம் தனியார் நிலத்திலிருந்து ஆற்றுமணல் எடுத்து செல்லப்படுவதை அறிந்த போலீஸார், காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் தலைமையில் அங்கு சென்று, மணல் திருட்டில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த காசி பழனிச்செல்வம், வர்க்கீஸ் ராஜா, விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்த கோவில்மணி, செல்வகுமார், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தியதாக 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம், 2 பைக்குள், ஒரு கார் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar





Johnson's Engineers




New Shape Tailors

selvam aqua





Thoothukudi Business Directory