» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தைப்பொங்கல் திருநாள்: திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு பூஜை - பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிறு 14, ஜனவரி 2018 9:50:52 AM (IST)



தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலையில் தை மாத பிறப்பு உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு திரளானவர்கள் வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். 


மக்கள் கருத்து

உண்மைJan 16, 2018 - 01:37:58 PM | Posted IP 122.1*****

முருகா சரணம்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar


selvam aqua





New Shape Tailors


Johnson's Engineers





Thoothukudi Business Directory