» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

வியாழன் 11, ஜனவரி 2018 11:32:04 AM (IST)

தமிழினத்தின் பெருங்கவிகளில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழை ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து எச்.ராஜா தரம்தாழ்ந்த சொற்களால் கவிஞர் வைரமுத்துவைத் தாக்கிப் பேசியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழிசெயலாகும். 

அந்தக் கட்டுரை ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை எந்த வகையிலும் இழிவுப்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எவரையும் புண்படுத்துவது தனது நோக்கமன்றும், தன் எழுத்துக்களால் யாரேனும் புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் அவர் கூறிய பின்னரும் தொடர்ச்சியாகப் பாரதிய ஜனதா கட்சியினர் அவருக்கு நேரடியாக அழைத்து இழிவாகப் பேசுவதையும் மிரட்டுவதையும் அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வகையில் ஏற்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

கவிஞர் வைரமுத்து அவர்கள் இவ்வினத்தின் பெருமை மிக்க இலக்கிய அடையாளங்களில் ஒருவர். அவரின் தமிழ் காலம் தாண்டி நிற்கக்கூடியவை. சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் ஆகிய அவரது படைப்புகள் தமிழர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. தனது எழுத்துக்களால் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் தமிழினத்தின் பெருங்கவி ஒருவரை இவ்வாறு தடித்த வார்த்தைகளால் மிரட்டுவதையும், இழித்துரைப்பதையும் எந்த உணர்வுமிக்கத் தமிழனும் ஏற்க மாட்டான். வைரமுத்து என்ற ஒருவரை பழிப்பது, அவரது பிறப்பை பழிப்பது போன்றவை அவர் ஒருவருக்கான இழுக்கல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான இழுக்கு.

ஒரு படைப்பு என்பது படைப்பாளியின் கருத்துகள் மற்றும் அதற்கான தரவுகள், மேற்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பீடத்தில் ஏறிய நாளிலிருந்து படைப்பாளிகளின் கருத்துரிமையை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. மாற்றுக்கருத்து என்ற வகையிலும், ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய கருத்து என்ற வகையிலும் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரை தமிழைப் பாடி தன் சொற்களால் உணர்ச்சிப்பெருக்கினால் தனது வரிகளை உன்னத இலக்கியங்களாக மாற்றியிருக்கிற ஆழ்வார்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்ற ஒரு பெண்ணான ஆண்டாளை பெருமைப்படுத்தி இருக்கிறதே ஒழிய, எவ்வகையிலும் இழிவுப்படுத்த வில்லை.

பக்தி இலக்கியங்கள் என்ற முறைமையில் மிகப்பெரிய இலக்கியப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவராக ஆண்டாள் திகழ்கிறார். தமிழர்களின் இறை நம்பிக்கைகளாகச் சைவமும், வைணவமும், ஆசீவகமும் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் தமிழ்ச்சமூகத்தில் நிலவியிருக்கின்றன. இவையொன்றுக்கு ஒன்று முரண்பட்டு பெரும் விவாதங்களாக விரிந்து தமிழ் மொழியைச் செழிக்க வைத்திருக்கின்றன. பல்வேறு இறை நம்பிக்கைகளைக் கொண்ட தமிழ்ச்சமூகத்திற்கு எவ்விதத் தொடர்புமில்லாத எச்.ராஜா மனம்போன போக்கில் வைரமுத்து அவர்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியிருப்பது அவரது அறிவின்மையைக் காட்டுகிறது.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்பட்ட ஆண்டாள் தான் வழிப்பட்ட கண்ணனை இறைவனாக மட்டுமல்லாது தனது கணவனாகவே வரித்து நின்றவர். வழிபடுகின்ற தெய்வங்கள் நம்மோடு வாழ்ந்தவர்கள், நம்மில் ஒருவர் என்கின்ற தமிழர் மரபு சார்ந்த கருத்தாக்கத்தின் சார்ந்து ஆண்டாள் தனது உணர்ச்சி மேலீட்டினால் தெய்வமென வழிபடும் கண்ணனை தன்னுடைய மணாளனாகப் பாவித்துச் சொற்களின் கவிதை அழகினால் தமிழ் மொழி சிறக்க பாடி நின்றவர். அவரது பாடல்களில் ஒருவரி கூட சமஸ்கிருதச் சொல்லாடல்களை எங்கும் காண இயலாது. அவ்வாறு இருக்கையில் சமஸ்கிருதமே இந்தியாவின் தாய் மொழி எனப் பிதற்றும் எச்.ராஜா போன்றோருக்கு ஆண்டாள் பற்றிப் பேச எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது.

வரலாற்றில் தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாக அடையாளப்படுத்தப்படவில்லை; அவர்கள் சைவர்களாக, வைணவர்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். தனது பிழைப்பிற்காகப் பல்வேறு இறை நம்பிக்கைகளை இந்து எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடக்க நினைக்கும் பாஜகவின் பாசிசப் போக்கினை தமிழர்களால் ஏற்க இயலாது. எனவே, தமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும் எவ்விதத் தொடர்புமற்ற எச்.ராஜா, தமிழினத்தின் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இழிவுப்படுத்தியதற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல், அதற்கான கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என இதன் வாயிலாக எச்சரிக்கிறேன்.


மக்கள் கருத்து

நாம் அண்ணாச்சிJan 11, 2018 - 05:37:14 PM | Posted IP 89.21*****

இருடி உனக்கு வெகு விரைவில் தமிழ் சங்கு ஊதும் நாள் வர போகுது ,,,,,

மக்கள்Jan 11, 2018 - 01:52:22 PM | Posted IP 122.1*****

உனக்கு சீக்கிரம் மண்டைய பொலப்பாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
Universal Tiles Bazar

selvam aquaJohnson's Engineers
New Shape Tailors
Thoothukudi Business Directory