» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

வெள்ளி 12, ஜனவரி 2018 5:29:46 PM (IST)

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்று இருப்பதை வருமான வரித்துறை உறுதி செய்திருப்பதால் தமிழக டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக சார்பில், குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திட வேண்டுமென்று நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கு சம்பந்தமாக, வருமான வரித்துறையினர் ஒரு அஃபிடவிட்டை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அது, எங்களுடைய வழக்கறிஞர் வில்சனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரமாணப் பத்திரத்தில், குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது உண்மை என்றும் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை யாரோ ரோட்டில் போய், வருபவர்கள் சொல்லவில்லை, வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு டிஜிபியாக இருந்த அசோக்குமாரின் ஒரிஜினல் கோப்புகளையும், அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது எடுத்திருக்கிறார்கள். அவையும் இன்றைக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை இவ்வளவு பகிங்கரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா விவகாரத்தில் நடந்த உண்மைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அன்றைக்கு போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன் இப்போது பதவி உயர்வு பெற்று, டிஜிபி பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக டிஜிபி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விலகவில்லை என்றால், முதல்வர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை, இன்றைய தினம் சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில் நாங்கள் எழுப்பினோம். அது நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் அதுபற்றி பேசக்கூடாது என்று சபாநாயகர் சொல்லி, எங்களை பேசவிடாமல் தடுத்துவிட்டார். எனவே, அதனைக் கண்டிக்கின்ற வகையில் திமுகவைச் சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




selvam aqua

Johnson's Engineers

Universal Tiles Bazar





New Shape Tailors





Thoothukudi Business Directory