» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டாட்சி நடக்கிறது : சீமான் குற்றச்சாட்டு!!

சனி 20, ஜனவரி 2018 5:26:35 PM (IST)

தமிழகத்தில் ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்  காட்டாட்சி நடப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பானது மக்கள் நலனென்பது துளியுமற்ற கொடுங்கோல் ஆட்சியின் கோரச்செயலாகும். தங்களது ஊழல்மய ஆட்சியினாலும், நிர்வாகச் சீர்கேட்டினாலும் நிகழ்ந்த இழப்புகளை ஈடுகட்ட மக்களைப் பலிகடாவாக்கியிருக்கும் கையாலாகத்தனம் இதுவாகும். இதன் மூலம் அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும், ஏழை, நடுத்தரவர்க்கத்து மக்களும் மிக மோசமாகப் பாதிப்படைவார்கள் என்பது திண்ணம். 

மத்திய அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கையாலும், மோசமானப்பொருளாதார நடவடிக்கைகளாலும் விலைவாசி உயர்வும், பணவீக்கமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற வேளையில் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் பூதாகரமெடுத்து புதைகுழியில் பொருளியல் வளர்ச்சியினைத் தள்ளியிருக்கிற சூழலில் தமிழக அரசிடமிருந்து வந்திருக்கிற இக்கட்டண உயர்வு மக்களின் தலையில் விழுந்த பேரிடியாகும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,509 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 2.02 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இவற்றுள் மிகப் பெரும்பான்மை மக்களும், அமைப்புசாராத் தொழிலாளர்களும் பேருந்துவழிப் பயணத்தையே முழுமையாக நம்பியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 50 விழுக்காட்டுக்கு மேலான கட்டண உயர்வால் அவர்களின் வருமானத்தில் ஒரு பங்கை பேருந்துப் பயணத்திற்காகவே செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே, கிராமப்புறத்தில் வாழ்வாதாரத் தொழில்களும், பொருளாதார நிலையும் மிகவும் நலிவுற்று இருக்கிற சூழலில் அது மக்களை மிக மோசமான நிலைக்குச் இட்டுச்செல்லும். 

இக்கட்டண உயர்வுக்கு எரிபொருள் விலையுயர்வைக் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியினைச் சந்தித்தாலும் அதன் பயன் மக்களைச் சென்று சேரவிடாது தடுக்கிற வண்ணம் மத்திய அரசோடு, மாநில அரசும் அதிகப்படியான வரியினை விதித்து எரிபொருள் விலையினை ஏற்றியிருக்கிறது. ஆகையினால், எரிபொருள் செலவினைக் காரணம் காட்டி பேருந்துக்கட்டண உயர்வை சரியென்று நிறுவ முற்படுவது சிறுபிள்ளைத்தனமானது. 

கடந்த 2001-2002ல், 98.86 கோடி ரூபாயாக இருந்த போக்குவரத்துத்துறையின் இழப்பானது கடந்தாண்டு செப்டம்பர் வரையிலான கணக்கீட்டில் 19 ஆயிரத்து, 829 கோடி ரூபாயாகி இருக்கிறது. இத்தோடு இத்துறையின் கடன்களையும் கணக்கிட்டால் அவையிரண்டும் சேர்ந்து ஏறத்தாழ 70,000 கோடியை நெருக்குகிறது. இவற்றிற்கு முழுக்க முழுக்கப் பொருட்பேற்க வேண்டியது ஆண்ட ஆட்சியாளர்கள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. அவர்களின் நிர்வாகத் திறமையின்மையும், அதில் நிகழ்ந்த முறைகேடுகளுமே போக்குவரத்துக் கழகத்தை இம்மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவோடு தமிழகத்தை ஒப்பிட்டு பேருந்துக்கட்டண உயர்வை சரியென்று வாதிடுவது பொருளற்ற வாதமாகும். அண்டை மாநிலங்களின் பொருளியல் நிலையும், வாழ்வியல் சூழலும் வெவ்வேறு அடுக்கில் இருக்க அதனைச் சமதளத்தில் நிறுத்தி நியாயம் கற்பிக்க முயல்வது அபத்தமானது.

குறைந்தது, பேருந்துக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டப் பிறகாவது அபாயகரமான நிலையிலுள்ள பேருந்துகளுக்குப் பதிலாக தரமான பேருந்துகளை இயக்குவார்களா? அதற்கு எந்த உத்திரவாதமாவது இருக்கிறதா? அப்படியேதுமில்லாதபோது இந்தப் பேருந்துக் கட்டண உயர்வின் பயன்களென எதனைச் சொல்வார்கள்? எத்தகையப் பயனையும் மக்களுக்குத் திரும்ப அளிக்காத இக்கட்டண உயர்வினை அப்புறம் எதற்காக மக்கள் மீது சுமத்த வேண்டும்? எதற்காக இக்கொடுமையினை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எழும் கேள்விகளுக்கு என்ன விடையைக் கூறப்போகிறார்கள்?

மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித உயர்வும் ஏற்படாமல் இருக்கிற பின்தங்கிய சூழலில் அவர்களின் பொருளியலை மேம்பாடு அடையச் செய்வதற்குரிய எவ்வித ஆக்கப்பூர்வப் பணிகளையும் மேற்கொள்ளாது ஆடம்பர விழாக்களினாலும், தேவையற்ற செலவினங்களினாலும் அரசின் நிதியிருப்பைக் காலிசெய்துவிட்டு அதனை ஈடுகட்ட மக்களின் தலையில் சுமையை ஏற்றும் கயமைத்தனத்தை எந்தவகையிலும் ஏற்க முடியாது. 

இதனை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, மாற்றுப் பொருளாதார வழியினைக் கொண்டு இழப்புகளை ஈடுகட்ட வேண்டுமே ஒழிய, அவ்விழப்புகளை மக்களின் மீது ஏற்றி வதைத்தல் கூடாது. அவ்வாறு வதைப்பது என்பது காட்டாட்சித்தனமான மிக மோசமான அரசியல் நடவடிக்கையாகும். இது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாகும். எனவே, மக்களுக்கு எதிரான இப்பேருந்து கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailorscrescentopticals
Thoothukudi Business Directory