» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராயுடு சதம், தோனியின் அதிரடி வீண்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வி

புதன் 11, ஜனவரி 2017 12:49:37 PM (IST)இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி போராடி தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக இந்திய ‘ஏ’ அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்தியா ஏ-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் இந்திய ‘ஏ’ அணியை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி மன்தீப்சிங்கும், ஷிகர் தவானும் இந்திய ‘ஏ’ அணியின் இன்னிங்சை தொடங்கினர். மன்தீப்சிங் 8 ரன்னில் கிளன் போல்டு ஆனார். அடுத்து அம்பத்தி ராயுடு இறங்கினார். தவானும், ராயுடுவும் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். 24.3 ஓவர்களில் அணி 100 ரன்களை கடந்தது. தவான் 63 ரன்களில் (84 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து களம் புகுந்த யுவராஜ்சிங், அடில் ரஷித்தின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய அம்பத்தி ராயுடு சதம் (100 ரன், 97 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். செஞ்சுரியை எட்டியதும் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து கேப்டன் தோனி நுழைந்தார். இந்திய சீருடையில் கேப்டனாக தோனியின் கடைசி ஆட்டம் இது என்பதால், அவரை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அவரும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்து குதூகலப்படுத்தினார். ஸ்கோர் 250 ரன்களை எட்டிய போது யுவராஜ்சிங் (56 ரன், 48 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் டக்-அவுட் ஆனார்.

இறுதிகட்டத்தில் தோனி, பின்னியெடுத்தார். 50-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசினார். அவரை புரட்டியெடுத்த தோனி 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேகரித்து அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் அவர் அரைசதத்தையும், அணி 300 ரன்களையும் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. தோனி 68 ரன்களுடனும் (40 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னுடனும் (7 பந்து) களத்தில் இருந்தனர்.

பின்னர் 305 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹாலெஸ் (40 ரன், 37 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜாசன் ராய் (62 ரன், 57 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்கள் இருவரையும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காலி செய்தார். கேப்டன் மோர்கன் (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அப்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் (18 ஓவர்) நெருக்கடிக்குள்ளானதால் இந்திய அணியின் கை சற்று ஓங்குவது போல் தெரிந்தது.

அதன் பிறகு சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பட்லர் 46 ரன்களிலும் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி ரன் ஏதுமின்றியும், டாவ்சன் 41 ரன்களிலும் வெளியேறினர். வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்த போது நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த சாம் பில்லிங்ஸ் (93 ரன், 85 பந்து, 8 பவுண்டரி) வீழ்ந்தார். இதனால் கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் கிறிஸ் வோக்சும்(1 ரன்), அடில் ரஷித்தும் (6 ரன்) இணைந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ஏ அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. 2-வது பயிற்சி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்துக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Black Forest Cakes

Panchai Dairy

selvam aqua


New Shape Tailors


Johnson's Engineers


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory