» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தலைமைச் செயலகத்தில் வருமானவரி சோதனை விவகாரம் : மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்

செவ்வாய் 27, டிசம்பர் 2016 8:27:42 AM (IST)

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகள் கூட்டாட்சி தத்துவத்தின் சில அடிப்படைக் கேள்விகளையும் எழுப்புகின்றன. ஒரு விஷயம் முதலிலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டும். அரசுப் பணிகளில் இருப்பவரோ, இல்லாதவரோ யாராக இருந்தாலும் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் தான். அதேபோல் மாநில அரசோ, மத்திய அரசோ இந்தியாவில் உள்ள எல்லா அரசுகளும் அரசு சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட எல்லா சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டவைகள் தான்.

ராம மோகன ராவ் வீட்டிலும் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றதாகவும், சோதனையிட்டதாகவும், ஊடகங்களில் வந்த செய்திகள் சில முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன. எல்லா மாநில அரசுகளுக் கும் அவர்களது பணியாளர் களை கண்காணிப்பதற்கு என்று அலுவலகங்கள் இருக் கின்றன. எப்படி மத்திய அரசின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு சி.வி.சி. மற்றும் சி.பி.ஐ. அமைப்புகள் இருக் கின்றனவோ, அதேபோல் மாநில அரசுகளிலும் அமைப்புகள் இருக்கின்றன.

தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் பணியாளர்களின் நடத்தையை சி.பி.ஐ. கண்காணிக்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கும் உரிமையினை இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களும், வழி நடத்தும் நெறிமுறைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கின்றன. எனவே, தமிழகத்தில் எந்த ஒரு பணியாளரையும் கண்காணிக் கவோ, நடவடிக்கை எடுக் கவோ சி.பி.ஐ.க்கு அதிகாரம் கிடையாது.

தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள துறைகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு மாநில பணியாளரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அந்தந்த தகவல்களை அனுப்ப முடியும். இதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் சி.பி.ஐ.க்கு கிடையாது. வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் படி சோதனையிடுவதற்கு என்று வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தியாவில் எங்கு சென்றாலும் மத்திய அல்லது மாநில அரசின் காவல் மற்றும் பிற துறை அதிகாரிகளின் உதவிகள் மற்றும் துணையினை கேட்டுப்பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பது உண்மை தான்.

எனவே, ராம மோகன ராவின் வீட்டிற்கு சோதனைக்குச் சென்றபோது மாநில அரசின் காவல்துறையின் உதவியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். கூடவே மத்திய அரசின் காவல் துணை ராணுவத்தினரையும் கூட்டிச் சென்றிருந்தாலும் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும்.ஆனால், துணை ராணுவத்தை மட்டும் கூட்டிச் செல்வது ஒட்டுமொத்தமாக மொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்று அவர்கள் கருதுவதான தோற்றத்தை அளிக்கிறது. இது மிக மிகத் தவறான பின்பற்றக் கூடாத முன் உதாரணம்.

ஒரு நாட்டை வழி நடத்திச் செல்வது அதன் அரசியல் நிர்ணய சட்டமும் மற்றும் பிற சட்டங்களும் மட்டும் அல்ல. நாட்டின் நிர்வாகத்தில் மரபுகள் மிக கவனத்துடன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனையிடும் முன் மாநில அரசின் அனுமதியைக் கேட்டுப் பெறுவது அத்தகைய மரபுகளில் ஒன்று. அப்படி அனுமதியைக் கேட்டுப் பெற்றார்கள் என்று எந்த தகவலும் இல்லை. கேட்காமல் சென்றிருந்தால் அதை விட மோசமான முன்னுதாரணம் இந்தியக் கூட்டாட்சி முறையில் இருக்க முடியாது. சில துணை வேந்தர்கள் போயஸ் தோட்டத்திற்கு சென்று தமிழக முன்னாள் முதல்-அமைச்சரின் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்ததை தேவையற்ற முறையில் பிரச்சினையாக உருவாக்கப் படுகிறது.

அனுதாபங்களைத் தெரிவிக்க எங்கு செல்ல வேண்டும், யாரிடம் செல்ல வேண்டும்? பிரதமர் மோடியும் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இருந்து வந்த முதல்- அமைச்சர்களும் மலேசிய நாட்டின் அமைச்சர் உள்பட மறைந்த முதல்-அமைச்சருக்கு இறுதி மரியாதை செலுத்திய பின் தங்கள் அனுதாபங் களை யாரிடம் கூறினார்கள்?, யார் அவருக்கு இத்தனை ஆண்டுகளாக கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் மற்றும் எல்லா தருணங்களிலும் உறுதுணையாக நின்றார்களோ அந்த சசிகலாவிடம் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தார்கள்.

அதுதான் சரியான முறை என்று அறிந்ததனால் அன்று அமைதி காத்த எதிர்க்கட்சி தலைவர் இன்று துணை வேந்தர்கள் முன்னாள் முதல்- அமைச்சர் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று சசிகலாவிடம் அனுதாபங்களைத் தெரிவித்ததை அரசியலாக்குவது அவரது தரத்திற்கும், பண்பிற்கும் கீழான செயல். அ.தி.மு.க.வின் உட்கட்சி விஷயங்களில் இன்று தி.மு.க. மூக்கை நுழைக்கவும், இலவச ஆலோசனைகள் வழங்கவும் முன் வந்திருக்கிறது. அமைச்சர்கள் கட்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், மாநில கவர்னர் எம்.எல்.ஏ.க்களை கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அடுத்த கட்சியின் உள் விஷயங்களில் நுழைவதற்கு முன் தங்கள் நிலையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பு ஒருமுறை சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என் நினைவிற்கு வருகிறது. அடுத்த கட்சி விஷயங்களில் கொஞ்சம் கவனமாக விலகி இருக்க வேண்டும். அடுத்த வீட்டிற்குள் எட்டிப்பார்ப்பது, அடுக்களைக் குள் எட்டிப் பார்ப்பது, திரையை விலக்கிப் பார்ப்பது, அந்தப்புரத்துக்குள் எட்டிப்பார்ப்பது ஆபத்தானது. எங்களுக்கும் உங்கள் கட்சி விஷயங்கள் தெரியும் என்று சொன்னார்கள். அதைத்தான் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் சிறு குழந்தைபோல் சுட்டித்தனம் செய்யாமல் அடுத்தவர்களின் திண்ணையில் இருந்து விலகி எட்டி நிற்பதே மேலானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads






Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes




selvam aqua



Thoothukudi Business Directory