» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சுகாதாரத்துறைக்கு முழு நேர அமைச்சரை நியமிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

செவ்வாய் 8, ஆகஸ்ட் 2017 12:55:19 PM (IST)

அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு பார்ட் டைம் மினிஸ்டர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.  சுகாதாரத்துறைக்கு முழு நேர அமைச்சரை நியமிக்க வேண்டும்  என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்..

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ""டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்ற உண்மைத் தகவலை டெல்லியில் பேட்டியளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய்யென இப்போது சுகாதாரத்துறை செயலாளரின் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசில் குவாரி முதல் குட்கா வரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் அளித்த பதிலின் பொய்யும், சாயமும் வெளுத்துப் போய் விட்டது. தமிழகத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், 13க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான திமுக எச்சரிக்கை மணி அடித்தாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் காதில் விழவில்லை. அந்த அமைச்சரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கவலைப்படவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் விநியோகித்தற்கான பட்டியலை வருமான வரித்துறை கைப்பற்றிய அன்றே அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அடுத்து மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை தாராளமாக விற்பனை செய்ய அனுமதிக்க 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்று புகார் வந்த போதாவது அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலக முதல்வர் கூறியிருக்க வேண்டும்.

மாநில அரசுக்கே 245 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்த குவாரி ஊழலை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்த அன்றே அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகளுக்கு ஏறக்குறைய 495 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி விட்டதாக வருமான வரித்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரை டெல்லிக்கு அனுப்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வளவு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை பார்க்கிறார். பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்கிறார். ஊழல் அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர்களுடனும், பிரதமருடனும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க முதல்வர் அனுமதிக்கிறார். ஆனால் நீட் தேர்வுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதியும் அளிக்கவில்லை.

மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுத் தரவில்லை. இதனால் மாணவர்கள் மருத்துவக் கல்வி கனவு சீரழிந்து இன்றைக்கு எதிர்காலம் சூன்யமாகிவிட்ட வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நீட் தேர்வுக்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தாரா அல்லது தனது மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லிக்கு சென்றாரா என்ற கேள்வி எழுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதாரத்துறையை முழுநேரப் பணியாக கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு பார்ட் டைம் மினிஸ்டர் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் இனம் புரியாத காய்ச்சலால் பலியாவதை தடுக்க இயலவில்லை. டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இன்றைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் டெங்கு பீதியடைந்திருக்கிறார்கள்.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டது. இந்நிலையில் அரசு மருத்துமனைகளில் டெங்கு பாதிப்பிற்காக அட்மிட் ஆகியிருப்பவர்களை விட தனியார் மருத்துவனைகளில் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அதிர்ச்சி இப்போது தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இனியும் வேடிக்கை பார்க்காமல் சுகாதாரத்துறைக்கு முழு நேர அமைச்சர் ஒருவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

"அது அமைச்சரின் இலாகா. நமக்கு என்ன கவலை" என்று மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தமிழக மக்களைக் குலை நடுங்க வைத்துள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, டெங்கு பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்"" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிAug 10, 2017 - 09:00:44 PM | Posted IP 103.2*****

அதை பார்ட் டயம் செயல் தலைவர் சொல்கிறார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

Johnson's Engineers


Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Sterlite Industries (I) Ltd

selvam aquaThoothukudi Business Directory