» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் எடப்பாடி அமைச்சரவையில் ... அண்புமணி கிண்டல்..!!

சனி 23, செப்டம்பர் 2017 5:21:22 PM (IST)

உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் எடப்பாடி தலைமையிலான பினாமி அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது  என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நொய்யல் ஆற்றில் கலக்க விடப்பட்ட சாயப்பட்டறைக் கழிவுகளால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், இதை மூடி மறைத்து சாயப்பட்டறை உரிமையாளர்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் முயன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சரே அவற்றை சீரழிப்பவர்களுக்கு ஆதரவாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அதைப் பயன்படுத்தி திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளன. கோவை மாவட்டத்திலுள்ள நகைப்பட்டறைகளும் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க விட்டன. இதனால் நொய்யல் ஆறு நுரை பொங்க ஓடியது. கரை புரண்டு ஓட வேண்டிய நொய்யல் ஆறு நுரை புரண்டு ஓடியதால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர்.

நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விட்ட சாயப்பட்டறைகள் மற்றும் நகைப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இப்பிரச்சனை குறித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகளுடன் திருப்பூரில் நேற்று கலந்தாய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணன், ‘‘நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளின் சாக்கடை கழிவுகள் தான் கலந்துள்ளன.

பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால் தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது. இப்போது நுரை வடிந்து விட்டது. இதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை’’ என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த விளக்கம் அபத்தத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறல்ல.நொய்யல் ஆற்றில் வெண்மை நிற நுரை பல அடி உயரத்திற்கு மிதந்து சென்றது. அது சாயப்பட்டறை மற்றும் நகைப்பட்டறைக் கழிவுகளால் உருவானது தான் என்பதை சுற்றுச்சூழல் வல்லுனர்கள் உறுதி செய்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கவில்லை என்று அமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். அமைச்சரின் விளக்கத்தைப் பார்க்கும் போது உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் எடப்பாடி தலைமையிலான பினாமி அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மதுரையில் ஓர் அமைச்சர் வைகை அணையில் தெர்மோகூல் அட்டை களை மிதக்க விட்டு நீர் ஆவி யாகாமல் தடுத்து சாதனை படைத்தார். திருப்பூரில் ஓர் அமைச்சர் வீடுகளில் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதைக் கண்டு பிடித்து புரட்சி செய்கிறார். இவர்களைப் போன்றவர்களிடம் தமிழக ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு தவிக்கும் மக்களை நினைத்தால் வேதனையாக உள்ளது.

நொய்யலாற்றில் கடந்த காலங்களில் சேரும் கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டு, காவிரியில் வெள்ளம் வரும் போது திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்தது. 1997ஆம் ஆண்டு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நொய்யலாற்று வி‌ஷக் கழிவு திறந்துவிடப்பட்டதால், காவிரி தண்ணீரைக் குடித்த கிராம மக்கள் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்; ஆடு, மாடுகள் செத்து மடிந்தன. நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் கலக்க அனுமதிக்கப்பட்டால் அதே போன்ற விளைவுகள் தான் இப்போதும் ஏற்படும்.

மேலும், அப்பகுதியில் புற்றுநோய், தோல்நோய் போன்றவை ஏற்படும். இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்தும் சாயப் பட்டறைகளுக்கு சாதகமாக, நொய்யலாற்றில் எந்தக் கழிவும் கலக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சரே சொல்வதை விட பெரிய பாவம் இருக்க முடியாது. இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மக்கள் நலனை விட சாயப்பட்டறைகளின் நலனை முக்கியமாக கருதும் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாக பினாமி முதல்-அமைச்சர் பதவி நீக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயலவில்லையெனில் அரசும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிSep 25, 2017 - 11:12:34 AM | Posted IP 103.2*****

காசுக்கு - மருத்துவ சீட்களை கூவிவிற்ற கபோதி

ஒருவன்Sep 24, 2017 - 05:19:58 PM | Posted IP 61.3.*****

சரியாக சொன்னாரு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Johnson's Engineers


New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua


Thoothukudi Business Directory